மதுபான கொள்கை முறைகேடு- அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!!
டெல்லி அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றசாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்குத் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில், அக்கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சுமார் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் அரவிந்தோ பார்மா நிறுவனர் சரத் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சி.யுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் மது வியாபார சந்தையின் பெரும் பங்கு அந்தக் குழுவுக்குக் கிடைக்க, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. கடந்த மார்ச் 11-ந் தேதி அவரிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவரை மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. இந்த சம்மனுக்கு எதிராகவும், தன்னை கைது நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் கவிதா மனுதாக்கல் செய்தார். அதனை அவசர வழக்காக விசாரிக்குமாறு அவர் கோரினார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது.
அப்போது அமலாக்கத்துறை சம்மனுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், கவிதாவின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் மறுத்து விட்டனர். அந்த மனுவை மார்ச் 24-ந் தேதி விசாரிக்க நீதிபதிகள் தீர்மானித்து உள்ளனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று கவிதா ஆஜராகவில்லை. ஆஜராவதில் இருந்து அவர் விலக்கு கேட்டுள்ளார். இதனால் கவிதாவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.