இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெற்றது ஃபாக்ஸ்கான்..!!
இந்தியாவில் ஆலை அமைத்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆடம்பர ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யும் ஆர்டரை அளித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைத்ததை அடுத்து, இந்தியாவில் ஏர்பாட் தயாரிக்கும் ஆலையை ஃபாக்ஸ்கான் அமைக்க உள்ளது. உலகின் மிகப்பெரிய ஒப்பந்த எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோன்களை தயாரித்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த ஐபோன் உற்பத்தியில் 70 சதவீதத்தை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் ஆகிய நிறுவனங்களின் பெரிய ஆலைகள் சென்னை அருகே இயங்கி வருகின்றன. இதுபோக விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஆலை பெங்களூரு அருகே இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆப்பிளின் ஏர்பாட் தயாரிக்கும் ஆலையை ரூ.1,655 கோடி முதலீட்டில் இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.