நார்ட் ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் விபத்துக்கு அமெரிக்காவே காரணம்: ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் குற்றச்சாட்டு!!
ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம்-2 எரிவாயு குழாய் வெடிவிபத்துக்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் எரிவாயுவை நம்பியே ஐரோப்பிய நாடுகள் உள்ளன. ரஷ்யாவில் இருந்து பால்டிக் கடலுக்கு அடியே குழாய்கள் வழியாக ஜெர்மனிக்கு எரிவாயு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருகுழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் ‘நார்ட் ஸ்ட்ரீம்-1’ திட்டம் உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ‘நார்ட் ஸ்ட்ரீம்-1’ குழாய்களுக்கு அருகிலேயே செல்லும் ‘நார்ட் ஸ்ட்ரீம்-2‘ எரிபொருள் குழாயில் கடந்த ஆண்டு கசிவு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஸ்வீடன் நடத்திய விசாரணையில், சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மூலம் எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனியர்கள் அல்லது ரஷ்யர்கள் இடம் பெற்றுள்ள உக்ரைன் குழுவினரே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினும், எரிபொருள் குழாய் வெடிப்புக்கு உக்ரைன் காரணம் என்பது முட்டாள்தனமான குற்றச்சாட்டு. இதுபோன்ற ஒரு வெடிபொருள் தகர்ப்பை மிகவும் சக்தி வாய்ந்த, சிறந்த தொழில்நுட்ப திறன் படைத்த நிபுணர்களை கொண்ட நாடுகள் மட்டுமே செய்ய முடியும். இதற்கு அமெரிக்காவே காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே எரிவாயு குழாய் வெடிப்பு நடந்த அன்று இரவு அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான உளவு விமானம் ‘நார்ட் ஸ்ட்ரீம்‘ குழாய்கள் உள்ள பகுதி அருகே பறந்து சென்றதாகவும், எரிவாயு குழாய்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி விட்டு, உக்ரைன், ரஷ்யா மீது பழி கூறி திசை திருப்ப முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் அமெரிக்கா மீது குற்றம் சாட்டியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.