;
Athirady Tamil News

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒன்றரை மாதங்களின் பின்னரே விடுதலை!!

0

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் இன்றைய தினமே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுயாதீன ஊடகவியலாளரும் , எழுத்தாளருமான “விவேகாந்தனூர் சதீஸ்” என அழைக்கப்படும் செல்லையா சதீஸ் கடந்த 15 வருடகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி சாரதியாக இருந்த வேளை , கடந்த 2008ஆம் ஆண்டு பணி நிமித்தம் கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி நோயாளர் காவு வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வவுனியா தேக்கவத்தை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 2011ஆம் ஆண்டு மன்று அவரை குற்றவாளியாக கண்டு ஆயுள் தண்டனை விதித்தது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.

மேல் முறையீட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் , கடந்த பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

அதனை அடுத்து தனது மேன் முறையீட்டு மனுவை மீள கையேற்க கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக மனுவை மன்றில் கையளித்தார். அதனை அடுத்து மன்று அவரின் மேன்முறையீட்டை மீள் அளித்தது.

அதனை அடுத்து அவரை விடுதலை செய்வதில் நீதி நிர்வாக செயற்பாடுகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையே அவருக்கு சிறைச்சாலையில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.