;
Athirady Tamil News

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: வனத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்.!!

0

கோவையை அடுத்த பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள வெள்ளியங்கிரி மலையில் 7-வது மலைப்பகுதியில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது உண்டு. செல்லும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி விழா ஆகிய நாட்களில் இந்த மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது உண்டு. தற்போது மலை மீது செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.

இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் 7-வது மலைக்கு சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகிறார்கள். இவ்வாறு வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மலை அடிவார பகுதியில் மலை ஏறும் இடத்தில் வனத்துறையினர் பக்தர்களை கடும் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கிறார்கள். இதற்கிடையே வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி மலையில் தீப்பிடித்தது. உடனடியாக இந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது.

வறட்சியால் மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து சறுகுகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே மலை மீது செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய தீப்பெட்டி, பீடி, சிகரெட், கற்பூரகம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். அதுபோன்று வனவிலங்குகள் நலன்கருதி பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்லக்கூடாது. வனப்பகுதியை நாம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எனவே இதில் அனைவரும் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.