ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும். அதன் மூலம் பால் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனையை தீர்த்து, பால் விநியோகம் செய்வதில் தாமதமில்லாமல், நுகர்வோருக்கு, பொது மக்களுக்கு தடையில்லா ஆவின் பால் விற்பனை செய்யப்பட வேண்டும்.
எனவே அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் இனிமேல் தட்டுப்பாடில்லாமல், பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் காலத்தே கிடைப்பதற்கு தமிழக அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.