பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி! பாடசாலை மாணவர்களுக்கு இலவச அரிசி!!
மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17.03.2023) கைச்சாத்திடப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனமான ´Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது.
இதன்படி மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி வழங்கப்படவுள்ளது.
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இரு தரப்புக்கும் இடையிலான உடன்படிக்கையே இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையின் கீழ் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகளை தடுப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பமாகின்றது.
அதேவேளை, மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில், இலவச சத்துணவு வேலைத்திட்டமும் சிறார்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான வேலைத்திட்டத்தையும் உலக வங்கி உதவியுடன் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்தார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அமைச்சரின் அதிகாரிகள், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனத்தின் ‘Good Neighbors International’ முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.