ரஷ்ய அதிபர் புடினை கைது செய்யுமாறு பிடியாணை !!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியமை உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு அவரே பொறுப்பு என்று நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
இதில் அவர் நேரடியாகவும் மற்றவர்களுடன் இணைந்து செயற்பட்டதாகவும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறுகிறது.
குழந்தைகளை நாடு கடத்தும் மற்றவர்களைத் தடுக்க ரஷ்ய அதிபர் தனது உரிமைகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவாவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படுகிறார்.
நீதிமன்றின் பிடியாணை தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறுகையில்,
“நீதிமன்றின் பிடியாணைகள் அர்த்தமற்றவை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், நம் நாட்டிற்கு எந்த அர்த்தமும் இல்லை,
ஏனென்றால், பிடியாணைகள் இருந்தபோதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்குள் மட்டுமே அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியும். அந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா கையொப்பமிடவில்லை” – எனக் கூறியுள்ளார்.