டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு!!
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- கடந்த முறை நான் டெல்லி வந்தபோது வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசினேன். அவர் அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்திய தூதராக இருந்துள்ளார். உலக பொருளா தாரத்தின் கவனம் இந்தியா மீது இருக்கும் சூழ்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அது தொடர்பாக அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தேன்.
அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் இந்த ஆட்சி தொடங்கும்போது நிதி நிலைமை கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருந்தது. அதை படிப்படியாக சரிசெய்து, கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும் குறைத்தோம். இந்த ஆண்டும் அந்த செயல்பாடு தொடர்கிறது. மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநிலங்களின் கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும், தற்போதைய புதிய அறிவிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. அதைப்போல தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக கூடுதல் நிதி கேட்டும் கோரிக்கை வைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கு குறைந்து கொண்டே போகிறது. மத்திய அரசின் பங்களிப்பு 4 சதவீதம் வரை இருந்தது. தற்போது 3 சதவீதத்துக்கு கீழே குறைந்துள்ளது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.