அமலாக்கத்துறை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் விசாரணைக் காவல் மேலும் நீட்டிப்பு!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மணீஷ் சிசோடியாவிடம் இன்னும் தகவல்களை பெற வேண்டியிருப்பதால் மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. காவலில் வைத்திருந்த ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், எனவே இனி சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மணீஷ் சிசோடியா தரப்பில் வாதிடப்பட்டது. ‘அமலாக்கத்துறை இதுவரை என்ன செய்தது? 7 மாதங்களாக வழக்கை விசாரித்து, மேலும் கஸ்டடி கேட்டால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் என்ன கிடைத்தது என்பதை அவர்கள் காட்ட வேண்டும். சிபிஐ நடத்த வேண்டிய விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதால் காவலை நீட்டிப்பதை நான் எதிர்க்கிறேன்.
அமலாக்கத்துறையானது குற்றச்செயல்கள் தொடர்பான வருமானத்தை மட்டுமே விசாரிக்க முடியும், குற்றத்தை அல்ல’ என்று சிசோடியாவின் வழக்கறிஞர் வாதாடினார். அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குனரகம், ‘சிபிஐ விசாரித்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சிசோடியா புகார் அளித்தார். எனவே, அவரிடம் அதிக நேரம் விசாரிக்கவில்லை’ என்று தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சிசோடியாவின் கஸ்டடியை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிசோடியா தனது வீட்டு செலவினங்களுக்காக காசோலையில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.