உலகம் முழுவதும் 30 நாடுகளில் 5 ஆயிரம் இசைக்கச்சேரிகள் நடத்திய பெண் தபேலா கலைஞர்!!
மும்பையை சேர்ந்தவர் அனுராதா பால். ஆண்கள் மட்டுமே தபேலா வாசித்து வந்த நிலையில் அனுராதா பால் உலகின் முதல் பெண் தபேலா வித்வானாக விளங்கி வருகிறார். சிறு வயதிலேயே இவரது இசைப்புலமையை கண்ட அவரது பாட்டி சரோஜ் பென், அனுராதா பாலை இசைப் பள்ளியில் சேர்த்தார். ஒரே நேரத்தில் இந்துஸ்தான் மற்றும் கர்நாடக இசையை பயின்றார். மேலும் கிதார், வீணை, வயலின், தபேலாவும் வாசிக்க கற்றுக் கொண்டார். பிரபல தபேலா வித்வான்களிடம் பயிற்சி பெற்ற பிறகு, 14 வயதில் இசைக் கச்சேரிகளில் பிரபலங்களுடன் மேடையில் தபேலா வாசிக்க தொடங்கினார். ஒருமுறை பெய்லோவில் அனுராதா பாலின் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓவியர் எம்.எப்.ஹுசைன், கச்சேரி முடிந்ததும் அவரிடம் சென்று, என்னுடைய ‘கஜகமினி’ படத்துக்கு நீங்கள் பின்னணி இசையைக் கொடுக்க வேண்டும் என்றார்.
மாதுரி தீட்சித் நடித்த படம் இது. ‘என்னால் ஆகுமா’ என்ற அனுராதா பாலிடம் வற்புறுத்தி அவரை இசை அமைக்க எம்.எப்.ஹுசைன், சம்மதிக்க வைத்தார். உலகிலேயே பெண் ஒருவர் தபேலா வாசித்து ரீ-ரிக்கார்ட் செய்யப்பட்ட ஒரே படம் இதுதான் என்கிறார்கள் இசை அறிஞர்கள். அனுராதா, ‘உலகின் முதல் பெண் தபேலா மேஸ்ட்ரோ’ என்ற இசையில் எம்.ஏ., பட்டம் பெற்றார். ஹார்வர்ட் மற்றும் நியூ இங்கிலாந்து போன்ற பல பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்றார். 30 நாடுகளில் 5 ஆயிரம் கச்சேரிகளை நடத்தியுள்ளார். இவர், 40 வகையான இசைக்கருவிகளை வாசிக்கக் கூடியவர். அனுராதா பால் கல்ச்சுரல் அகாடமியை ஏற்பாடு செய்து வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் விருது உட்பட 108க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். அனுராதா பால் பாலின பாகுபாடு, அவமதிப்பு மற்றும் பல சிரமங்களை எதிர்கொண்டார். பெண் கலைஞர்களைக் கொண்டு ‘ஸ்த்ரி சக்தி’ என்ற இசைக்குழுவை உருவாக்கி 27 ஆண்டுகளாக உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார்.