7 மாநில முதல் மந்திரிகள் ஒருங்கிணைந்து “ஜி-8” எனும் புதிய அமைப்பு தொடக்கம்- பா.ஜ.க.வை வீழ்த்த அதிரடி வியூகம்!!
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா, சாவா என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி உருவாகுமா இல்லையா என்பதே மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. பா.ஜனதாவுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் காங்கிரஸ் அண்ணன் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக கூறி மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகரராவ் போன்ற தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் போன்றவர்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுத்து வருகிறார்கள். இதையடுத்து மம்தா பானர்ஜி புதிய அணியை உருவாக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளார். சமீபத்தில் அவர் அகிலேஷ் யாதவை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்தக்கட்டமாக அவர் வருகிற 23-ந் தேதி ஒரிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு சந்திரசேகரராவ், மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் அவர் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.
இந்நிலையில் 7 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் பீகார் துணை முதல்-மந்திரி ஆகியோர் ஒருங்கிணைந்து ஜி-8 என்ற புதிய அமைப்பை தோற்றுவித்து இருப்பது தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), நிதிஷ்குமார் (பீகார்), சந்திரசேகரராவ் (தெலுங்கானா), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), பகவந்த் மால் (பஞ்சாப்), கெஜ்ரிவால் (டெல்லி) ஆகிய 7 முதல்-மந்திரிகளும் மற்றும் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் (பீகார்) ஆகிய 8 பேர் ஜி-8 அமைப் பில் முக்கியத் தலைவர்களாக உருவெடுத்து உள்ளனர். கடந்த வாரங்களில் இவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் 3 தடவை ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதையடுத்து ஜி-8 அமைப்பை அடுத்தடுத்து தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு ஜி-8 அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் பதவி விவகாரம் பற்றி பேசாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு பற்றி இப்போதே பேசி முடிவு செய்யலாம் என்று காங்கிரசுக்கு 7 மாநில முதல்-மந்திரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராகுல்காந்தி இதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே ஜி-8 அமைப்பு வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கும், மாநில முதல்-மந்திரிகளுக்கும் இடையே விரைவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சம்மதிக்காத பட்சத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் போன்ற தலைவர்கள் தனித்து வேறு முடிவு எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.