பிரேக்அப் பயமா?.. ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் பண்டில் முதலீடு செய்யுங்க… இணையத்தில் வைரலாகும் ட்வீட்!!
காதலாக இருந்தாலும் சரி, திருமண பந்தமாக இருந்தாலும் சரி ‘பிரேக்அப்’ என்பது வேதனையான விஷயம். இப்போது சாதாரண விஷயங்களைக் கூட சகித்துக்கொள்ள மனம் இல்லாமல் உறவுகளை பிரிந்து செல்கின்றனர். அப்போது, ஏமாற்றிய நபர் தனது தவறை உணரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புவார்கள். அப்படி விரும்பிய ஒருவர், இதயத்தை காப்பீடு செய்த செயல் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதலியால் ஏமாற்றப்பட்ட அவர், ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் பண்ட் என்ற பெயரில் வங்கியில் சேர்த்த பணத்தை பெற்று ஆறுதல் அடைந்திருக்கிறார்.
அவர் பெயர் பிரதீக் ஆரியன். இவர் காதலிக்கும்போது தன் காதலியுடன் இணைந்து சேமித்த ரூ.25000 பணத்தை காதல் பிரேக்அப் ஆனதும் பெற்றுக்கொண்டதாக டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காதலி ஏமாற்றியதால் எனக்கு 25000 ரூபாய் கிடைத்தது. எங்கள் காதல் தொடங்கியதும், வங்கியில் ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கி இருவரும் மாதந்தோறும் தலா 500 ரூபாய் டெபாசிட் செய்தோம்.
இருவரில் யார் ஏமாற்றினாலும், எல்லாப் பணத்தையும் விட்டுக்கொடுப்பதாக முடிவு செய்தோம். அதுதான் ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் பண்ட் (HIF). இவ்வாறு அவர் கூறி உள்ளார். உடைந்த இதயங்களுக்கு பணம் ஒரு மருந்தாக இருக்காது. ஆனால், உண்மையாக காதலித்த இதயத்தை உடைத்த நபரே அந்த பணத்தை கொடுக்க நேரிட்டால் ஆறுதல் அளிப்பதாக இருக்கும். அத்துடன், அவரது குற்றத்தை உணர்த்துவதாகவும் அமையும் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது. இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பயனர்கள் பிரதீக்கின் புத்திசாலித்தனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
இது நல்ல ஐடியாவா இருக்கே.. என கூறி உள்ளனர். சிலர் கிண்டலாகவும் பதிவிட்டுள்ளனர். ‘நான் முதலீட்டு வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தேன். இது ஒரு சிறந்த வருமானம் கொடுக்கும் முதலீடாக தெரிகிறது. யாராவது என்னுடன் இணைய விரும்புகிறீர்களா?’ என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ‘HIF முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை’ என்று மற்றொரு பயனர் கிண்டலாக கூறி உள்ளார்.