இம்ரான் வீட்டில் தொண்டர்களை அடித்து விரட்டிய 10,000 போலீசார்: ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்.! பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நீதிமன்றத்திற்கு ஆஜராக சென்ற நேரத்தில், 10 ஆயிரம் போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டு, தொண்டர்களை விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது பதவிக்காலத்தில் வெளிநாட்டு பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் பலமுறை ஆஜராகாததால் அவருக்கு மாவட்ட நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இதனால் இம்ரான் கைதாவதை தடுக்க லாகூரில் ஜாமன் பூங்கா பகுதியில் உள்ள வீட்டில் அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி தொண்டர்கள் குவிந்தனர். வீட்டு வளாகத்தில் முகாமிட்டு போலீசார் உள்ளே நுழைவதை தடுக்க தயாராக இருந்தனர்.
இந்நிலையில், அனைத்து வழக்கிலும் இம்ரானுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், பரிசுப்பொருள் வழக்கு விசாரணை தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக அவர் நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். அடுத்த சிறிது நேரத்தில் அப்பகுதியில் ஆயுதம் ஏந்திய 10 ஆயிரம் பஞ்சாப் மாகாண போலீசார் குவிக்கப்பட்டனர். இம்ரான் வீட்டை சுற்றி பாதுகாப்பு கேடயமாக இருந்த தொண்டர்கள் அடித்து விரட்டப்பட்டனர். புல்டோசர் மூலம் இம்ரான் வீட்டின் கதவை இடித்து தள்ளி உள்ளே புகுந்த போலீசார் அங்கிருந்து கட்சி தொண்டர்களை தடியடியால் சரமாரியாக அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. இம்ரான் வீட்டிலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப் போலீஸ் ஐஜி உஸ்மான் அன்வர் கூறுகையில், ‘‘போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் சும்மா விட முடியாது. இம்ரான் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 20 துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் ரகசிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 61 கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். இந்த அதிரடி நடவடிக்கையில் பிடிஐ கட்சி தொண்டர்கள் 10 பேரும், 3 போலீசாரும் காயமடைந்துள்ளனர். இம்ரான் வீட்டில் புகுந்த போலீசார் அங்கிருந்து பணியாளர்களையும் கடுமையாக துன்புறுத்தியதாக பிடிஐ கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.