யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை செய்ததில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு!!
பெற்றோரின் அதீத மத நம்பிக்கை காரணமாக புற்றுநோய்க்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் கடந்த வருடம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.
அந்நிலையில் , பெற்றோர் கோப்பாய் பகுதியில் உள்ள மத வழிபாட்டு இடத்திற்கு சென்று தமது பிள்ளைக்காக பிரார்த்தனை செய்தனர்.
அதன் போது அங்கிருந்தவர்கள் , வைத்தியத்தால் பிள்ளையை குணமாக்க முடியாது எம்மிடம் அழைத்து வாருங்கள் பிரார்த்தனைகள் மூலம் குழந்தையை குணமாக்கலாம் என பெற்றோருக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர்.
அதனை அடுத்து பெற்றோர் தமது பிள்ளையை சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்து செல்ல போவதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பொய் கூறிவிட்டு , பிள்ளைக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காது , மத வழிபாட்டு தலத்திற்கு அழைத்து சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு வருட காலத்திற்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுவனுக்கு நோயின் தன்மை தீவிரமாகி வயிறு வீங்கி உணவு உண்பதனை குறைத்துள்ளான். அந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் உயிரிழந்துள்ளான்.