நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: என்னை கைது செய்ய போலீசார் திட்டம்- டிரம்ப்!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த அவர், வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தகவல் ஒன்றை தெரிவித்தார். தன்னுடன் டிரம்ப் நெருங்கிய உறவில் இருந்தார் என்று தெரிவித்தார். இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார்.
தேர்தலின்போது இந்த தகவல் வெளியானதால் அதுபற்றி ஸ்டோர்மி டேனியல்ஸ் பேசாமல் இருக்க 1.30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணம், பிரசாரநிதியில் இருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் தான் வருகிற 21-ந்தேதி கைது செய்யப்பட உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மன்ஹாட்டன் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கொள் காட்டி டிரம்ப், தனது ட்ருத் சமூக வலைதளத்தில் கூறும்போது, முன்னணி குடியரசு கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்படுவார். போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.