ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு !!
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் 2-வது பெரிய நகரான குயாகு விலுங் தெற்கே 80 கிலோ மீட்டர் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. பெரு நாட்டின் எல்லைக்கு அருகே உள்ள ஈக்வடாரில் பலோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
நில நடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். மீட்புபடையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலநடுக்கம் பெரு நாட்டிலும் உணரப்பட்டது. அங்கும் வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் ஈக்வடாரில் 13 பேர் பலியானார்கள். பெருவில் ஒருவர் உயிரிழந்தார். 126 பேர் காயம் அடைந்துள்ளனர். ஈக்வடாரில் கடலோர மாகாணமான எல்வோராவில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பெருவில், ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பேஸ் பகுதியில் இடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாள்.
எல்வோரா மாகாணத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் குயிட்டோ, மனாபி, மந்தா, குயென்சு, மச்சாலா உள்ளிட்ட நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.