டெல்லியில் பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளிய வாலிபர்!!
வடமேற்கு டெல்லியின் மங்கோல புரியில் நேற்று இரவு 11.30 மணியளவில் அங்குள்ள முக்கிய சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளினார். அப்போது காரில் மற்றொரு வாலிபரும் இருந்தார். அந்த பெண்ணை காருக்குள் ஏற்றி கொண்டு சென்றனர். அப்பெண்ணுக்கு யாரும் உதவ முன் வரவில்லை. பரபரப்பான சாலையில் இளம்பெண் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கார் வாடகை கார் என்பது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராவில் கடைசியாக அந்த கார் குருகிராமில் காணப்பட்டதும் தெரிந்தது. காரின் எண் மூலம் அதன் உரிமையாளரின் முகவரி அரியானாவில் குருகிராமில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு போலீசார் சென்று உள்ளனர். அந்த கார், ரோகினி பகுதி முதல் விகாஸ்புரி வரை செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது காரில் இருந்தவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு இச்சம்பவம் நடந்துள்ளது.