;
Athirady Tamil News

பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு நோட்டீஸ்: ராகுல்காந்தி வீட்டில் டெல்லி போலீசார்- காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்!!

0

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி எம்.பி.யாக இருக்கிறார். லண்டன் சென்று இருந்த ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும், இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தி பாராளுமன்றத்தை 5 நாட்கள் முடக்கினர். அதே நேரத்தில் காங்கிரஸ் அதை மறுத்து ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கமாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை கடந்த செப் டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30-ந் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார். காஷ்மீரில் அவர் பேசும்போது ‘இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். போலீசில் புகார் அளிக்கலாமே என கேட்டேன். அப்போது காவல் துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள்.

3 மணிநேரம் காத்திருந்து அவரிடம் இந்த நோட்டீசை கொடுத்தார்கள். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த நோட்டீஸ் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று ராகுல்காந்தி வீட்டுக்குச் சென்றனர்.

சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் ஒரு குழு அவரது வீட்டுக்குச் சென்றது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல்காந்தியிடம் போலீசார் கேட்டனர். ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்றதை அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு கூடினார்கள். அவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.