முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு !!
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந் நிலையில் கொக்குத் தொடுவாய் கமக்கார அமைப்பினர், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை திங்கட்கிழமை (20) அழைத்து அங்குள்ள நிலைமைகளைக் காண்பித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொக்குத்தொடுவாய் – கோட்டக்கேணியிலிருந்து, அம்பட்டன் வாய்க்கால், தீமுந்தல், பணம்போட்டகேணி, நாயடிச்ச முறிப்பு, வெள்ளைக்கல்லடி, சிவந்தாமுறிப்பு, சூரியனாறுவரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் அரச திணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கோ, கமக்கார அமைப்பினருக்கோ அறிவித்தல் வழங்கப்படாமலேயே குறித்த எல்லைக் கற்கள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறக மக்களுக்கு அறிவித்தல் வழங்காமல் எல்லைக்கல் நாட்டும் செயற்பாடொன்று, ஏற்கெனவே கடந்த வருட இறுதிப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அப்போது இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகள் மற்றும், வெலி ஓயா பகுதி நிலஅளவைத் திணைக்களத்தினரோடு பேசி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மற்றும், அப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு நாட்டப்பட்ட எல்லைக்கற்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுமிருந்தனர்.
அத்தோடு இனிமேல் இவ்வாறான எல்லைக்கல் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இருந்தால் காணிகளுக்குரிய மக்கள், கமக்கார அமைப்பினர், மாவட்ட செயலாளலர் மற்றும், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவித்தல் வழங்கியே எல்லைக்கல் நாட்டப்படுமென, எல்லைக்கல் நாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் தற்போது மீண்டும் எவ்வித முன்னறிவிப்புமின்றி தமிழ் மக்களுக்குரிய வயல் காணிகளில் எல்லைக் கற்கள் நாட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பினை ஏற்று குறித்த பகுதிகளுக்கு நேரடியாகச் சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், இது தொடர்பில் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார்
மேலும் குறித்த செயற்பாடுதொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும், பிரதேச செயலாளர் ஆகியோரது கவனத்துக்கும் கொண்டுவர உள்ளதாகவும் கொக்குத் தொடுவாய் பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.