பட்டப்பகலில் துணிகரம்… நகைக்கடை ஊழியர்களை தாக்கி தங்க நகைகள்- பணத்தை கொள்ளையடித்த கும்பல்!!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது43) தங்க நகைகளை செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர் ஆவார். இவர் சென்னை, நெற்குன்றத்தில் தங்கியிருந்து தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க நகைகளை செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு தங்களது பணியாட்கள் மூலம் சப்ளை செய்வாராம். மேலும், நகைகளை கொடுத்து விட்டு ஒரு சிலரிடம் உடனடியாக பணத்தை பணியாளர்கள் பெற்று வருவார்களாம். ஒரு சிலரிடம் அடுத்த முறை செல்லும்போது பணத்தைப் பெற்றுக் கொள்வாராம்.
இந்நிலையில், இவரது கடையில் வேலை செய்யும் சோகன்(வயது 23), காலுராம்(வயது30) ஆகியோர் இன்று காலை நகைகளை சப்ளை செய்ய நெற்குன்றத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் புறப்பட்டு வந்தனர். பூந்தமல்லி, நசரத்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட கடைகளில் நகைகளை சப்ளை செய்து விட்டு வசூல் ஆன ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், 1,400 கிராம் (175 சவரன்) தங்க நகைகளையும் தங்களது பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றனர்.
தாமரைப்பாக்கம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மாகரல் பஸ் நிறுத்தத்துக்கும் காரணி பாட்டை கிராமத்துக்கு இடையில் இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நாலு பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். உடனடியாக அவர்கள் நாலு பேரும் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்திகளை எடுத்து சோகன் மற்றும் காலூராமை மிரட்டி அவர்களிடமிருந்த பேக்கை பறித்தார்களாம். இதனை தடுத்த சோகனை சரமாரியாக வெட்டினார்களாம்.
இதனால் அவரது இடது கையில் வெட்டுப்பட்டு இரத்தம் கொட்டியதாம். இதனால் மர்ம நபர்களிடம் பேக்கை கொடுத்து விட்டு திருடன், திருடன் என்று கத்தினார்களாம். உடனடியாக இது குறித்து வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்களாம். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் ஸ்பெஷல் டீம் என மொத்தம் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும், இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.