குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை- பட்ஜெட் அறிவிப்புக்கு கமல் ஹாசன் வரவேற்பு!!
தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக கமல் கூறியிருப்பதாவது:- இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.