காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் விரிவாக்கம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!!
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவதும், அவர்களின் வளர்ச்சித் தடைபடுவதும் தெரிய வந்தது. பல குழந்தைகள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதால், அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முதலமைச்சர், சமூக நீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான கனவுத் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்து வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம் என்ற முதலமைச்சரின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.