போட்டியிட வந்த அரச ஊழியர்கள் அல்லல் !!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவாவுக்கு அனுப்பிய கடிதத்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச சேவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நியாயமான தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த பொது நிர்வாக அமைச்சுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த முடியாவிட்டால் இந்த அதிகாரிகள் இதுவரை பெற்ற ஒருங்கிணைந்த சம்பளத்தில் நியாயமான சதவீதத்தை மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் தினம் வரை அனைத்து வகையான கடன்கள் மற்றும் சம்பளத்தில் வசூலிக்கப்படும் வட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.