யாழில் கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிள் கொடுத்த குற்றம் – ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிணை!!
கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவரது சகோதரனான பொலிஸ் உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் , மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அதனை அவதானித்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்ட போது , மோட்டார் சைக்கிளில் இருந்து பொதி ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , தப்பியோடிய நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்று சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருடையது என பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றனர்.
விசாரணைகளின் போது தனது பெயரில் உள்ள மோட்டார் சைக்கிளை தனது சகோதரனான பொலிஸ் உத்தியோகஸ்தரே கடந்த பத்தாண்டு காலமாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.
அதேவேளை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்று அவரை பிணையில் விடுவித்தது.
யாழில். கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்த குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!!!