ஒளி கொடுத்துவிட்டார் ஜனாதிபதி : ஆனந்தகுமாருக்கு ஆனந்தம்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான முயற்சியால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் வசதி கிடைக்கப்பெற்றமையானது இலங்கையை மீண்டும் பழைய நிலைக்கு ஈட்டுச்செல்லும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் வரலாறுகாணாத நெருக்கடிகளை சந்தித்திருந்த தருணத்தில் எமது நாடு அதலபாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்டதாகவும் இனி இந்த நாடு சோமாலியாவை போன்றதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என அனைவரும் கூறினர். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இன்று நாடு மீண்டெழுந்துள்ளதுடன் வெகுவிரைவாக பழைய நிலைக்குச் செல்லும் சூழல் உதயமாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது. அவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படாதிருந்தால் இன்று உண்மையிலேயே எமது நாடு சோமாலியாவாகதான் மாறியிருக்கும். மக்கள் வரிசையில் நின்ற யுகத்துக்கு வெறும் இரண்டு மாதத்தில் முடிவுகட்டிய ஜனாதிபதி இன்று மக்களின் வாழ்க்கைச் செலவையும் குறைப்பதற்கு பல கடினமான தீர்மானங்களை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி கடந்த காலத்தில் எடுத்திருந்த சில தீர்மானங்களால் மக்களுக்கு நேரடியான நன்மைகள் கிடைக்கவில்லையென எதிர்க்கட்சியினர் கூறினார்கள். ஆனால், அந்தத் தீர்மானங்கள்தான் இன்று நாட்டை மூச்சுவிடும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. எதிர்வரும் ஆறுமாதகாலப்பகுதிக்குள் நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க ஜனாதிபதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதனால் டொலரின் பெறுமதி 200 ரூபாவரை குறையும். அதேபோன்று மக்களின் வாழ்க்கைச் செலவு, மின்சாரக் கட்டணங்கள், எரிபொருள் விலை உட்பட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய அனைத்துக் காரணிகளிலும் விரைவில் மாற்றங்கள் ஏற்படும். அதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள அங்கீகாரம் பெறும் உதவியாக அமையும்.
தேர்தல்கள் நாட்டுக்கு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மக்களை பட்டினியில் போட்டுவிட்டு தேர்தலை நடத்தி யாருக்கு பயன். தேர்தல் நடத்துவதற்கான சூழல் விரைவில் உருவாகும். அப்போது மக்கள் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற முடியும். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் அவரை அடுத்த பல ஆண்டுகளுக்கு நாட்டின் ஜனாதிபதியாக தொடரச்செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” – எனவும் கூறியுள்ளார்.