விவசாயத்தை பாதுகாக்க கோரி குமரியில் இருந்து சென்னைக்கு மாட்டு வண்டியில் குடும்பத்துடன் பயணம் செய்யும் தம்பதி !!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர்பிரதாப் லிவி (வயது 25) இவருடைய மனைவி அனு ஸ்ரீ.இவர்கள் விவசாயத்தை காப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டு வண்டியில் குமரியில் இருந்து சென்னைக்கு பயணமாக புறப்பட்டனர். குழந்தைகளோடு கடந்த ஜனவரி 11-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு ஒரு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்கிறார்கள்.
பின்னர் மாட்டு வண்டியை அங்கு நிறுத்தி இயற்கை விவசாயத்தை காப்போம். மருந்தில்லா உணவை கொடுப்போம். வரும் சந்ததிக்கு நோயில்லாத வாழ்க்கையை வலுப்படுத்துவோம். செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் நாட்டு காளை மாட்டு இனங்களை காக்க வேண்டும். வெளிநாடு மாடுகள் இனத்தை அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த மாட்டு வண்டி பயணத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி எடுத்துரைத்து அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.