;
Athirady Tamil News

உரிமைகளை ஏன் தடுக்கின்றீர்கள்?

0

காணாமல் ஆக்கப்படுதலுக்கு பரிசு வழங்குவதானால் இலங்கைக்கே முதல் பரிசு வழங்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளை, சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெடுந்தீவு பகுதியில் வலுக்கட்டாயமான முறையில் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன என்றும் மறுபுறம் சிங்கள மக்கள் வாழாத நாவற்குழி பகுதியில் பௌத்த விகாரையை முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா திறந்து வைக்கிறார் மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்களின் தொன்மையை பறைசாற்றும் குருந்தூர் மலை, வெடுக்குநாறி ஆகிய வரலாற்று சிறப்புமிக்க தலங்களில் புத்தர் தோன்றியுள்ளார் எனவும் இந்த நாடு எதை நோக்கிச் செல்கிறது? யுத்தம் முடிவடைந்த பின்னரும் எமது உறவுகள் நிம்மதியாக வாழ முடியாமல் தொடர்ந்து உரிமைகளுக்காக போராடுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழ்களின் காணிகள் இன்றும் படையினர் கைவசம் உள்ளன எனவும் சொந்த நிலங்களை படையினரிடம் விட்டுக் கொடுத்து விட்டு தமிழர்கள் வீதியில் நிற்கிறார்கள் என்றும் தெரிவித்த அவர், அவரவர் உரிமைகளை அவரவருக்கு வழங்குவதை ஏன் தடுக்கின்றீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.

அற்ப சொற்ப அதிகாரங்களை கொண்டிருந்த மாகாண சபை முறைமை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது. தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகிறது என்றார்.

யுத்த காலத்தில் தமிழர்களை கொலை செய்வதற்கு சிங்கள படைகளுக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தற்போது ஏன் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில்லை? என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்த நாட்டில் தமிழர்கள், தமிழர்களின் நிலங்கள் காணாமல் ஆக்கப்பட்டன என்றும் ஆணைக்குழுக்கள் மற்றும் அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட முறைமைகள் காணாமல் ஆக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையும் காணாமலாக்கப்பட்டுள்ளது எனவும் காணாமல் ஆக்கப்படுதலுக்கு பரிசு வழங்குவதானால் இலங்கைக்குத்தான் முதல் பரிசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.