வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை!!
தெலுங்கானா மாநிலம், திருமலகிரி, செகந்திராபாத் எஸ்.பி.எச் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருந்தார். பவித்ரா திருமலகிரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தார். பவித்ராவிற்கும் மலக்பேட்டையை சேர்ந்த அவினாஷ் என்பவருக்கும் கடந்த 2016 ஜூன் மாதம் 6-ந் தேதி திருமணம் நடந்தது. தம்பதிக்கு அவிஷிதா (5) என்ற மகள் உள்ளார். மகள் திருமணத்தின் போது அவரது பெற்றோர் ஏராளமான சீர்வரிசை பொருட்கள் மற்றும் நகை, பணத்தை கொடுத்து உள்ளனர். பவித்ராவிற்கு குழந்தை பிறந்த பிறகு அவினாசி நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. மது போதைக்கு அடிமையான அவினாசி தினமும் மது குடித்துவிட்டு வந்து பவித்ராவிடம் கூடுதலாக ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து பவித்ரா மலக்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவினாஷை வரவழைத்து கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் மீண்டும் மது குடித்து விட்டு வந்து பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பவித்ராவின் பெற்றோர் மகள் வீட்டிற்கு வந்து இருந்தனர். அப்போது அவினாஷ் அவர்களிடம், உங்களது மகளை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் தனது நடத்தையை மாற்றிக்கொண்டு குடிப்பழக்கத்தை நிறுத்திவிடுவதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கார் வாங்க ரூ.2 லட்சம், அவினாசியிடம் கொடுத்துவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவினாஷ் வேலைக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பவித்ராவின் பெற்றோர் மலக்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதில் வரதட்சணை கேட்டு அவினாஷ் தனது மகளை துன்புறுத்தி வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து போலீசார் அவினாசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.