;
Athirady Tamil News

3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளில் ‘எகனாமி’ வகுப்பு மீண்டும் வருகிறது!!

0

ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. சிறப்பான, மலிவான ஏ.சி. ரெயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், ‘எகனாமி’ வகுப்பில் 80 படுக்கைகளும் இருந்தன. ‘எகனாமி’ வகுப்பு பயணிகளுக்கு போர்வை வழங்கப்படாமல் இருந்தது.

‘எகனாமி’ வகுப்பு அறிமுகம் மூலம் ஒரே ஆண்டில் ரெயில்வேக்கு ரூ.231 கோடி வருவாய் கிடைத்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம்வரை 15 லட்சம் பயணிகள் அந்த வகுப்பில் பயணம் செய்தனர். அதன்மூலம் மட்டும் ரூ.177 கோடி வருவாய் கிடைத்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘எகனாமி’ வகுப்பு, வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. அந்த வகுப்பு பயணிகளுக்கும் போர்வை வழங்கப்பட்டதால், போர்வைக்கான கட்டணமாக ரூ.60 முதல் ரூ.70 வரை பயணிகள் கூடுதலாக செலுத்த வேண்டி இருந்ததால், இரு பிரிவினருக்கும் கட்டணம் சமமாகி விட்டது.

இந்தநிலையில், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் மீண்டும் ‘எகனாமி’ வகுப்பு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே நேற்று அறிவித்தது. இதன்மூலம், கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. 2021-ம் ஆண்டு ‘எகனாமி’ வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது. அதனால், வழக்கமான கட்டணத்தை விட ‘எகனாமி’ வகுப்பு பயணிகளுக்கு 6 முதல் 8 சதவீதம்வரை கட்டணம் குறைவாக இருக்கும். அதே சமயத்தில், அவர்களுக்கு போர்வை வழங்கப்படும் என்று ரெயில்வே கூறியுள்ளது. இந்த அறிவிப்பால், ஏற்கனவே ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் கவுண்ட்டர் மூலமாகவும் முன்பதிவு செய்த 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பயணிகள், கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் (ரீபண்ட்) என்று ரெயில்வே தெரிவித்துள்ளது. தற்போது, ரெயில்களில் வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11 ஆயிரத்து 277-ம், ‘எகனாமி’ வகுப்பு பெட்டிகள் 463-ம் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.