ஒப்பந்தம் குறித்து ஹர்ஷவின் கருத்து !!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் தவணை தொகையை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நிதியமைச்சர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் இந்த இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும் தன்மையில் உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுங்கள் என்றும் 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் பல தடவை வலியுறுத்தினோம்.
ஐஎம்எப் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு எதிரியை போல் பார்த்தது. இறுதியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. தாமதமான நிலையிலாவது சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் நடவடிக்கைகளை கொண்டு அரசியல் செய்யும் தேவை எமக்கு கிடையாது.
சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பான 154 பக்க அறிக்கை இன்று (நேற்று) காலை கிடைக்கப் பெற்றது. ஆகவே அறிக்கையை முழுமையான பரிசீலனை செய்ய வேண்டும். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அவதானத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை வெளிப்படுத்துவோம்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 14 ரில்லியன் ரூபாய் தேசிய கடன் உள்ளது. மறுபுறம் வங்கி நிதியியல் கட்டமைப்பு தொடர்பில் தெளிவான நிலைப்பாடு குறிப்பிடப்படவில்லை.
முதல் தவணை தொகையை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நிதியமைச்சர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை” என்றார்.