இனப்பிரச்சினை தீர்வை உள்ளடக்குவது அவசியம் !
இனப்பிரச்சினைக்கான தீர்வும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்ச்சியாக ஏமாற்றும் விடயமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி நிதி எங்களுடைய ஏழை மக்களின் வாழ்க்கையை வைத்தியசாலை, பாடசாலைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்.
ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக கொண்டு செயற்படுவதனாலேயே நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.
இவ்வாறான ஊழையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றேன். ஊழலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்போதே நாட்டின் பொருளாதாரம் உச்சமடைந்து செழிப்பான நாடாக மாறும்” என்றார்.
போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல
இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு தமது கடற்றொழிலாளர்கள் இன்று (23) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்றார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு எமது கடற்றொழிலாளர்கள் நாளைய தினம் (இன்று) ஆர்ப்பாட்டமொன்றை செய்யவுள்ளனர்.
எமது மக்களையும், இந்திய மக்களையும் கொழுவிவிடும் பேச்சாகவே இதனை பார்க்கின்றோம். ஏனென்றால் ஏற்கெனவே இந்திய ரோலர் படகுகளின் வருகையால் பல்வேறு இன்னல்களை இவர்கள் சந்தித்திருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் எமது மீனவர்கள் இதில் அச்சம் கொண்டுள்ளனர்.
இதனால் இவ்வாறான வேலைகளை யாரும் பார்க்க வேண்டாம் என்று கேட்கின்றோம். இந்தியாவுடனான நெருக்கத்தை இடைவெளியாக்குவதற்காகவே இதனை கூறுகின்றனர். எமது மீனவர்கள் நடத்தும் போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்பதனையும் கூறிக்கொள்கின்றோம்” என்றார்.
படுகொலை தகவல்கள் வெளியே வர வேண்டும்
2000 ஆம் ஆண்டு புனர்வாழ்வு முகாமில் நடந்த படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
“புனர்வாழ்வு முகாம் படுகொலை தொடர்பில் 200 கிராமவாசிகள் பொலிஸாரால் கைது என்ற செய்தி 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று தமிழ் பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது. அந்த முகாமில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான விசாரணைகள் நடைபெற்றதாக காட்டிக்கொண்டாலும், அந்த விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
அந்த படுகொலைகள் யாரால் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட்டதா? இந்த படுகொலை தொடர்பில் நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கியது என்ற தகவல்களை வெளிக்கொணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.