அதானி குழும மோசடியை தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம்- ஹிண்டன்பர்க் அறிவிப்பு!!
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுவதாகவும், பங்கு சந்தையை ஏமாற்றி லாபம் பார்க்கிறது என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும் வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதாகவும் ஆய்வு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் கடும் இழப்புகளை சந்தித்தன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றன. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா? அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.