கேரளாவில் கிழிந்த ரூபாய் நோட்டு கொடுத்ததாக மாணவியை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட பெண் கண்டக்டர்!!
கேரள மாநிலம் அரசு பஸ்களில் பெண் கண்டக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அக்குளம் பகுதியில் ஒரு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் சென்ற அரசு பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி உள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அவர்கள் ஏறி உள்ளனர். அந்த பஸ்சில் பணிபுரிந்த பெண் கண்டக்டர், டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், 20 ரூபாய் கொடுத்துள்ளார்.
அந்த நோட்டு கிழிந்து சேதமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனை மாற்றி விட்டு வேறு ரூபாய் தருமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால் மாணவி தன்னிடம் வேறு பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த பெண் கண்டக்டர், பணம் இல்லாவிட்டால், பஸ்சில் இருந்து இறங்கி விடு எனக் கூறியதால், மாணவி அதிர்ச்சி அடைந்தார். இந்த நேரத்தில் பஸ் பள்ளியில் இருந்து நீண்ட தூரம் வந்து விட்டது. எனவே மாணவி என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். இருப்பினும் அவரை பெண் கண்டக்டர் நடுவழியில் இறக்கி விட்டுள்ளார். மாணவி தேர்வு எழுதி விட்டு வந்ததால், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் தவிப்புக்குள்ளானார்கள். சுமார் 30 நிமிடம் அவர், அங்கு நின்றபோதும் அடுத்த பஸ் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பெண் என பாராமல் நடுவழியில் மாணவியை இறக்கி விட்டது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அரசு போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் குழு விசாரணையில் இறங்கியது. சில பெண் கண்டக்டர்களின் படங்களை, பாதிக்கப்பட்ட மாணவியிடம் காட்டினர். அப்போது ஒரு படம் மீது சந்தேகம் காட்டிய மாணவி, நேரில் பார்த்தால், கண்டக்டரை அடையாளம் தெரியும் என்றார். இருப்பினும் அந்த செயலில ஈடுபட்ட பெண் கண்டக்டர் யார்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.