உலக பணக்காரர்களில் அம்பானிக்கு 9-வது இடம்- அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்!!
‘ஹுருண் இந்தியா’ ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி ரூ.4.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார். அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு ரூ.6.77 லட்சம் கோடி ஆகும். இவரது சொத்து மதிப்பும் 20 சதவீதம் சரிவை கண்டு உள்ளது. கடந்த 2021-2022ம் நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடத்தில் இருந்தார். இப்போது அவர் அந்த அந்தஸ்தை இழந்து 2-வது இடத்துக்கு வந்து உள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சீரம் இந்தியா நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா ரூ.2.23 லட்சம் கோடி சொத்துகளுடனும், எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் ரூ.2.14 லட்சம் கோடி சொத்துகளுடனும், தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.1.65 லட்சம் கோடி சொத்துகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தில் உள்ளார்.
அதேநேரத்தில் அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில் இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சைரஸ் பூனாவாலா 46-வது இடத் திலும், சிவ் நாடார் 50-வது இடத்திலும், லட்சுமி மிட்டல், எஸ்.பி.ஹிந்துஜா ஆகியோர் 76-வது இடத்திலும் உள்ளனர். திலீப் ஷங்வி 98-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 107-வது இடத்திலும், குமார் மங்கலம், உதய் கோட்டக் ஆகியோர் 135-வது இடத்திலும் உள்ளனர். உலக அளவிலான பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா 32 சதவீதத்தை கொண்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.