3D அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது!!
முப்பரிமாண அச்சிடல் (3D printing) முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது ரொக்கெட் இன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் நகரிலிருந்து இந்த ரொக்கெட் ஏவப்பட்டது.
கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தினால் இந்த ரொக்கெட் தயாரிக்கப்பட்டது. ‘டெரென் 1’ (Terran 1) என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மார்ச் 8 ஆம் திகதி டெரென் 1 ரொக்கெட்டை ஏவுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 11 ஆம் திகதிக்கு அது ஒத்திவைக்ப்பட்டது. எனினும் அத்திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது,
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு இலங்கை, இந்திய நேரப்படி இன்று வியாழன் காலை இந்த ரொக்கெட் விண்வெளிக்கு வெற்றிகராக ஏவப்பட்டுள்ளது.
முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட ரொக்கெட் விண்வெளியை நோக்கிய கடுமையான ஏவுகை செயற்பாடுகளுக்குத் தாக்குப்பிடிக்குமா என ஆராய்வதற்காக இந்த ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
எனினும் வெற்றிகரமாக எவப்பட்ட போதிலும் இந்த ரொக்கெட் சுற்றுப்பாதையை அடையத் தவறியதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.
110 அடி (33.5 மீற்றர்) நீளமான இந்த ரொக்கெட் 7.5 (2.2 மீற்றர் விட்டமுடையதாகும். இந்த ரொக்கெட்டின் இயந்திரங்கள் உட்பட 85 சதவீதமான பாகங்கள் கலப்பு உலோகங்கள் மூலம் முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்டவையாகும்.
உலகில் இதுவரை முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய பொருள் இதுவாகும் என ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.