பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!!
உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் உக்ரைன் உடனான போரை சீனாவின் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று புதின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். உரையாடலுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
உக்ரைன் போரின் பின்னணி: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இப்போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.