;
Athirady Tamil News

இந்தியாவில் உள்ள விமானிகளில் 15% பேர் பெண்கள்- இது உலக சராசரியில் 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்!!

0

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் எனவும், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, “2021 ஆம் ஆண்டில் மொத்தம் 244 விமானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டிற்கு ஆண்டுக்கு 1,000 விமானிகள் தேவைப்படலாம்” என்று தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதில், வணிக விமானிகளின் வருடாந்தரத் தேவையானது ஒரு விமான நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம், விமான நிறுவன விரிவாக்கத் திட்டம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) கருத்துப்படி, “இந்தியாவில் உள்ள பல்வேறு உள்நாட்டு விமான நிறுவனங்களில் 67 வெளிநாட்டுப் பிரஜைகள் உள்பட தோராயமாக 10,000 விமானிகள் உள்ளனர்” என்றது. அறிக்கை வெளியீட்டின்படி, நாட்டில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் 35 அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவை 53 தளங்களில் இயங்குகின்றன. இருப்பினும், தற்போது பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விமானிக்கான பயிற்சியை ஊக்குவிப்பதற்காக சிறப்புத் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.