புறப்பட்ட சில நிமிடங்களில் வீட்டினுள் புகுந்த கிளைடர்- ஆபத்தான நிலையில் விமானி!!
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டது. மேலே சென்ற சிறிது நேரத்தில் திடீரென இறங்கிய கிளைடர் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானி மற்றும் 14 வயது பயணி காயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட கிளைடர் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், உரிய விசாரணைக்கு பின்னரே காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த பயணி பாட்னாவைச் சேர்ந்தவர். அவர் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். விமானத்தில் இருந்து நகரத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட சிறுவன் கிளைடர் சவாரி செய்துள்ளான். இந்த கிளைடர் சேவை ஒரு தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதில், விமானி மற்றும் ஒரு பயணி என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தன்பாத் நகர மக்கள் பொழுதுபோக்கிற்காக மேலிருந்து நகரத்தை பார்த்து மகிழும் வகையில் இந்த கிளைடர் சேவை தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, நகரின் வான்வழிப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.