;
Athirady Tamil News

கச்சதீவிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் – கச்சதீவு தல பரிபாலகர் கோரிக்கை!!

0

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு யாத்திரை தல பரிபாலகர் அருட்பணி வசந்தன் அடிகளார் கோரிக்கை விடுத்தார்.

கச்சதீவில் பெளத்த சின்னங்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இன்றையதினம் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு என்றாலே தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏன் அண்மைய காலமாக சிங்கள மக்களுக்கும் ஞாபகத்துக்கு வருவது புனித அந்தோனியார் ஆலயமே.

கச்சதீவு அந்தோனியாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தீவாக தொன்றுதொட்டு காணப்படுகின்றது.

ஆனால் திட்டமிட்ட வகையில் அண்மைய நாட்களில் இரண்டு புத்த பெருமானின் சிலைகள் வைக்கப்பட்டதுடன் அரச மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது.

யாருக்கும் தெரியாத வகையில் உயரமாக பனை ஓலைகளால் வேலியமைத்து அது மூடப்பட்டு காணப்படுகின்றமையை சில நாட்களுக்கு முன்னர் பார்த்த புகைப்படங்கள் மூலம் அறியக்கிடைத்தது. எதிர்காலத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவதற்கான முயற்சியே இது.

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்கின்றது. அங்கு 7 தொடக்கம் 10 வரையான கடற்படையினர் கடமையாற்றுகின்றனர். அவர்கள் வழிபட சிறியதான புத்தர் சிலையை வைத்து வழிபடலாம். ஆனால் இவ்வளவு பெரிய புத்தர் சிலைகள் எதற்கு? அதை ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும். கச்சதீவில் எந்தப்பகுதியிலும் அரச மரங்கள் இல்லை. ஆனால் திட்டமிட்ட வகையில் அரசமரங்கள் நாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு தமிழர் பகுதியில் பௌத்த திணிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

போருக்கு பின்னர் இன ஒற்றுமை பற்றி பேசப்படும்போது இவ்வாறான விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள இவ்வாறான விடயங்கள் அகற்றப்பட வேண்டும். கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனிதத்திற்கும் தனித்துவத்திற்கும் பாதிக்காத வகையில் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.