;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள். அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 கட்சிகளும் யாத்திரை பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது. கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சி மேலிடம் அமைத்துள்ள தேர்வு குழு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 9 கட்டங்களாக நடந்தது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் சிபாரிசு செய்திருந்த பெயர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளி்ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, அதை கட்சி மேலிட வேட்பாளர் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

இதில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தேவனஹள்ளியில் முனியப்பா, பெங்களூரு ராஜாஜிநகரில் புட்டண்ணா, ஆர்.ஆர். நகர் குசுமா, பெல்காம் ஊரகத் தொகுதியில் லட்சுமி ஹெப்பால்கர், தாவாங்கேரே தெற்குத் தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பா, எம். பி பாட்டீலுக்கு பாபலேஷ்வர் சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.