ராகுல் காந்தியின் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு!!
2019ம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஜலந்தர், லட்சத்தீவு மற்றும் வயநாடு ஆகிய மக்களவை தொகுதிகள் காலியாக இருப்பதாக மக்களவை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலந்தர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக உள்ளது. இதேபோல் லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல், கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் லட்சத்தீவு தொகுதி காலியாக உள்ளது. 2004 முதல் 2019 வரை ராகுல் காந்தி அமேதி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2019 பொதுத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போடடியிட்டார். அமேதியில் ராகுல் காந்தியை பாஜக தலைவர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். மற்றொரு தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.