நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக செல்லும் ரெயில்கள் தாமதம்- பயணிகள் அவதி!!
நாகர்கோவில்-நெல்லை இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது நாங்குநேரி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து நேற்று மாலை வெள்ளோட்டம் விடப்பட்டது. இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருவதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 6.12 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்த ரெயில் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் சுமார் 45 நிமிடம் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.
பின்னர் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் நாங்குநேரி ரெயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. வழக்கமாக இரவு 7.15 மணிக்கு நெல்லை சென்று சேரும் இந்த ரெயில் நேற்று இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இதேபோல் அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து இன்று காலை நெல்லை மார்க்கமாக செல்லும் ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது. பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை வந்து சேர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடையும். ஆனால் இந்த ரெயில் இன்று காலை ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதே போல் சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடம் தாமதமாக நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.