இந்தியாவில் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் காசநோயால் இறக்கிறார்கள்- கலெக்டர் தகவல்!!
உலக காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி குமரி மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் விழிப்புணர்வு சுடர் தொடர் ஓட்ட நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு காசநோய் பாதித்து குணமடைந்தவர்களுடன் காசநோய் ஒழிப்பு சுடரை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ந் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளத்தில் உள்ள காசநோய் மையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை காசநோய் ஒழிப்பு கடர் ஏந்திய தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில் வருடத்துக்கு 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 4 லட்சம் பேர் காசநோயால் மரணடைவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குமரி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 1,391 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் எச்.ஐ.வி மற்றும் காசநோயால் பாதிப்புக்குள்ளானவர் 13 பேர். சிபினாட் எனும் அதிநவீன கருவி மூலம் 9,755 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அதன் மூலம் பன்முக தன்மை காசநோயாளிகள் 16 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை காசநோய் விழிப்புணர்வு மிக அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் காசநோயாளிகளின் எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. அதே சமயம் காசநோய் பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. தற்போது காசநோய் பரிசோதனைக்காக மூன்று சிபினாட் அதிநவீன கருவிகளும், மூன்று ட்ரூணாட் கருவிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2025-ம் ஆண்டுக்குள் முழுமையான காசநோய் இல்லா மாவட்டமாக மாற்ற முடியும்.
தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்கள் தாங்கள் கண்டறியும் காசநோயாளிகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கோ, மாவட்ட காசநோய் மையத்திற்கோ தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் தன்னார்வலர்கள், மாணவ- மாணவிகள் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (காசநோய்) வி.பி.துரை, உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.