;
Athirady Tamil News

ரயிலை தடுத்து மறியல் போராட்டம் !!

0

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த ரயிலை மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியில் மறித்த பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேர தாமத்தின் பின்னர் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2.30மணியளவில் சுவிஸ்கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் ரயில் கடவையினை கடக்கும் பகுதியை ரயில் நிலைய ஊழியர்கள் அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பிரதேச மக்கள் குறித்த வீதியில் பாரிய எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது ரயில் கடவையினை மறித்து பொதுமக்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டது.

பெருமளவான பொதுமக்கள் வீதியை மறித்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன் அப்பகுதிக்கு வந்த கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.

எனினும் அகற்றப்பட்ட வீதியை மீளபுனரமைத்துதரும் வரைக்கும் தாங்கள் இப்பகுதியை விட்டுச்செல்வதில்லையெனவும் குறித்த வீதியை நிரந்தரமாக நிர்மாணித்துத் தரும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த வீதியுடாக மிகவும் குறைந்த நேரத்தில் மட்டக்களப்பு நகருக்கு செல்லமுடியும் என்பதுடன் இந்த வீதியில்லாவிட்டால் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு மாணவர்களை கொண்டுசெல்லும்போதும் கடமைகளுக்காக செல்லும்போதும் இந்த வீதியில்லாவிட்டால் நீண்டதூரம் சுற்றிச்செல்லவேண்டிய நிலையுள்ளதாகவும் இந்த பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பாரியளவில் எரிபொருளை செலவிடமுடியாத நிலையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதியை மீண்டும் பயன்பாட்டுக்கு ஏற்றமுறையில் தராவிட்டால் தாங்கள் இப்பகுதியிலிருந்து செல்வதில்லையெனவும் புகையிரதத்தினையும் செல்லவிடமாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதன்போது பொதுமக்களிடமும் ரயில் நிலைய அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடாத்திய கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த வீதியை மீண்டும் பாவனைக்குவிடும் வகையில் மீண்டும் குறித்த வீதியை தற்காலிகமாக புனரமைப்பு செய்வதாக உறுதியளித்தார்.

எனினும் அதனை புனரமைப்பு செய்தபின்னரே தாங்கள் கலைந்துசெல்வோம் என பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அகற்றப்பட்ட பகுதியை மீண்டும் ரயில் நிலைய வேலைப்பகுதி ஊழியர்கள் புனரமைத்ததைத் தொடர்ந்து மீண்டும் ரயில் செல்வதற்கு பொதுமக்கள் அனுமதியளித்தனர்.

எனினும் குறித்த பகுதியை நிரந்தரமாக புனரமைத்துதராவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.