கர்நாடக மக்களே காங்கிரசிடம் உஷாரா இருங்க… இமாச்சலில் நடந்ததுதான் இங்கும் நடக்கும்… மோடி பரபரப்பு பேச்சு!!
கர்நாடக மாநிலம் தாவனகரே நகரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கர்நாடகாவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டிய ஒரு மாநிலமாக பாஜக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் பணத்தை பெறும் ஏடிஎம் மிஷினாக கர்நாடகாவை பார்க்கிறது. காங்கிரசின் உண்மையான சொரூபம் என்ன என்பதை நாம் இமாச்சல பிரதேசத்தில் பார்க்கிறோம். தேர்தலுக்கு முன்பு அவர்கள் பெரிய பெரிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்கள். வேலைவாய்ப்பை அதிகரிப்போம், இலவசமாக இதைத்தருவோம், அதைத்தருவோம் என வாக்குறுதிகளை அளித்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பட்ஜெட் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் இல்லை. இதுதான் காங்கிரசின் அரசியல். இப்படிப்பட்ட காங்கிரசை நம்ப முடியுமா? பொய் வாக்குறுதிகளை தரும் காங்கிரசை நம்ப முடியுமா? அப்படிப்பட்ட காங்கிரசை கர்நாடகாவில் கால் ஊன்ற விடலாமா? இப்போது வாக்குறுதிகள் என்னவயிற்று? என இமாச்சல பிரதேச மக்கள் அந்த அரசை கேட்கிறார்கள். எனவே கர்நாடக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இமாச்சல பிரதேசத்தில் செய்ததுபோல் இங்கும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள். காங்கிரஸ் எனக்கு குழிதோண்டுவது போல் கனவு கண்டுகொண்டிருக்கிறது.
அவர்களின் கனவு மோடியின் கல்லறைக்கு குழி தோண்டுவது என்றால் கர்நாடக மக்களின் கனவு மற்றும் உறுதிமொழி என்னவென்றால், மோடியின் தாமரை இங்கு மலரும் என்பதாகும். உலகம் இன்று இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது. இந்தியா நமது கர்நாடகத்தை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. உலக முதலீட்டாளர்களை வரவேற்கும் பெங்களூரு ஹப் போன்ற பல ஹப்கள் கர்நாடகாவில் உள்ளன. கொரோனா காலத்தில்கூட அதிக முதலீடுகளை கர்நாடகா ஈர்த்தது. இதற்காக முதலமைச்சரையும் அவரது குழுவினரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.