திருப்பதியில் வசந்த உற்சவ விழா: டிக்கெட்டுகள் இணையதளத்தில் நாளை மறுநாள் வெளியீடு !!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவடைவது வழக்கம் அதன்படி 3-ந்தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை சென்றடைகின்றனர்.
பின்னர் பூஜைகள் முடிந்து மாலை கோவிலுக்கு திரும்புகின்றனர். 4-ந்தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் 4 மாட விதிகளில் தங்க தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. 5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஏழுமலையான், சீதாராமர் லஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி, கிருஷ்ணர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், சாதம் ஆகியவை மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 முதல் 6-30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் நேற்று 63, 507 பேர் தரிசனம் செய்தனர்.29,205 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.