அம்ரித் பால்சிங்குடன் தொடர்பு வைத்திருந்த தம்பதி கைது!!
பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு என்ற கோஷத்துடன் செயல்படும் ‘பஞ்சாப் தி வாரிஸ்’ அமைப்பின் தலைவர் அம்ரித் பால்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். கடந்த 9 நாட்களாக தேடுதல் வேட்டை நீடித்து வரும் நிலையில் அம்ரித் பால்சிங்கின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் என இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான அம்ரித் பால்சிங் அரியானாவுக்கு தப்பி சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அவர் நேபாளம் தப்பி செல்ல முயல்வதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து நேபாள எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர் டெல்லியில் துறவி வேடத்தில் சாதாரண உடையில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் டெல்லியிலும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே அம்ரித் பால்சிங்குடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியை சேர்ந்த அம்ரிக்சிங், அவரது மனைவி பரம்சித்கவுர் ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் அம்ரித் பால்சிங்கின் நெருங்கிய உதவியாளரான பப்பில்பிரீத் சிங்குடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து இருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான தம்பதியினரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே அம்ரித் பால்சிங்குடன் பல வீடியோக்களில் காணப்பட்ட தல்விந்தர்சிங் மற்றும் வீரேந்தர்சிங் ஆகிய 2 மெய்க்காப்பாளர்களின் ஆயுத உரிமங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள கித்துவார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.