கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி- நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 2 நாள் ஒத்திகை!!
நாடு முழுவதும் தினசரி 100-க்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலை மாறி உள்ளது. தற்போது தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கேற்ப, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கையும் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வைரஸ் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிற இன்புளூவன்சா பரவலும் பெருகி வருகிறது. இது சற்றே கவலை அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் விதத்தில் ஆஸ்பத்திரிகளின் தயார் நிலையை சோதித்து அறிய வருகிற 10 மற்றும் 11-ந்தேதிகளில் ஒத்திகை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபற்றிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக வெளியிட்டுள்ளன. ஒத்திகையின்போது, அரசு மற்றும் தனியார் துறையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆஸ்பத்திரிகளில் மருந்துகள், ஆஸ்பத்திரி படுக்கைகள், மருத்துவ தளவாடங்கள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பு சோதித்து அறியப்படும். இந்த ஒத்திகை தொடர்பான விரிவான தகவல்கள், நாளை (27-ந்தேதி) காணொலிக்காட்சி வழியாக நடத்தப்படுகிற ஆலோசனை கூட்டத்தின்போது மாநிலங்களிடம் தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளன. 10 லட்சம் பேருக்கு 140 என்ற அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப அமையவில்லை. குறைவான எண்ணிக்கையில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் கொரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.