“மோடிக்கு பதில் ஊழல் என்று மாற்றிக்கொள்ளலாம்”- இணையத்தில் வைரலாகும் குஷ்புவின் பழைய டுவீட்!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தகுதி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கடந்த 2018ம் ஆண்டில் மோடிக்கு எதிராக பதிவிட்ட டுவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அப்போது காங்கிரஸ் உறுப்பினராக இருந்த குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், மோடி என்றால் ஊழல் என்று மாற்ற வேண்டும். மோடி எல்லா இடங்களிலும் இருக்கிறார். ஆனால் இது என்ன? மோடியின் குடும்பப்பெயர் ஊழலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். 2018ம் ஆண்டில் பதிவான இந்த இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் கொந்தளத்து போன குஷ்பு, “காங்கிரஸ் கட்சி என்னுடைய பழைய ட்வீட்டைத் தொடுத்து பரப்புவது அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று கூறினார்.
மேலும் அவர்” நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது வெளியிடப்பட்ட ‘மோடி’ ட்வீட் குறித்து நான் வெட்கப்படவில்லை. அப்போது நான் அக்கட்சித் தலைவரைப் பின்தொடர்ந்து கட்சியின் மொழியை மட்டுமே பேசினேன்,” என்று விளக்கமளித்தார் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்த குஜராத் அமைச்சர் பூர்ணேஷ் மோடி, குஷ்பு சுந்தர் மீதும் வழக்குப் பதிவு செய்வாரா என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள், அந்த ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி 2020ல் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.